“சிந்துசமவெளி தொடங்கி குமரி வரை திராவிடக் கூறுகள் ஒளிந்து கிடப்பதாகச் சொல்கிறீர்கள். அதேசமயம் ‘வடக்கே வேங்கடம் முதல் குமரி வரை’ என்றுதானே தமிழ் எல்லையைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது?’’

“குமரி முதல் வேங்கடம் வரை என்பது நம் தமிழ் அரசியல் பரப்பாக இருந்தது. ஆனால், மொழிப் பரவல் அதையும் தாண்டியது. இந்தியா முழுக்க யாரை ஆய்வு செய்து பார்த்தாலும் சிந்துசமவெளி டி.என்.ஏ-வைப் பார்க்க முடியும். சிந்து நாகரிக காலத்துக்குப் பின் வந்தவர்களிடம் அந்த டி.என்.ஏ இல்லாமல் போகலாம்.

சிந்துசமவெளிப் பகுதி எனப் பார்த்தால் பாகிஸ்தான் பகுதியில் சிந்து, பஞ்சாப், கீதார் மலைத் தொடருக்குக் கீழே சுலைமான் மலைத் தொடர், ராக்கி கார்டி  என்ற ஹரியானாவில் இருக்கும் பகுதி ஆகியவை. மொத்தம் 900 கிலோ மீட்டர் பரப்பு. வட ஆப்கானிஸ்தான் தொடங்கி பஞ்சாப், ராஜஸ்தான் குஜராத் வரைக்கும் நீண்டிருந்த குடியிருப்புப் பகுதி.

கி.மு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  சிந்து சமவெளிப் பகுதியில் பிரமாண்ட நகரம் இருந்தது. அப்படியே தமிழகத்துக்கு வாருங்கள். சங்க இலக்கியத்தில் பிரமாண்டமான நகர வர்ணனைகள் வருகின்றன. நகரங்களைப் போற்றும் பல குறிப்புகள் நம் சங்க இலக்கியத்தில் கிடைக்கின்றன. ‘மொழிபெயர் தேயத்து புலம்பெயர் மக்கள் இனிது வாழ்ந்தனர்’ எனச் சங்க இலக்கியம் சொல்கிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் திராவிட நாகரிகம் இந்தியா முழுக்க இருந்ததை உணரலாம்.’’